ஒரு சமயம் கடல் பொங்கி, இத்தலத்தை சூழ வந்தபோது, சிவபெருமான் துர்வாச முனிவரை அனுப்பி, இத்தலத்தின் அக்னி மூலையில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டால் கடல் அமைதியடையும் என்று கூற, முனிவரும் அவ்வாறே வந்து வழிபட்டார். அதனால் இத்தலத்து மூலவருக்கு 'துர்வாச நாயனார்' என்ற பெயர் ஏற்பட்டு, பின்னர் 'தூவாய் நாதர்' என்று மருவியது.
மூலவர் 'தூவாய் நாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'பஞ்சின்மெல்லடியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
திருவொற்றியூர் தலத்தில் கண் பார்வை இழந்த சுந்தரர், திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோல் பெற்று, காஞ்சிபுரத்தில் இடது கண் பெற்ற பின்னர், இத்தலத்திற்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, வலது கண் பார்வையையும் பெற்றார்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர், துர்வாசர், சுந்தரர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|